(மதிப்பிற்குரிய நண்பர் அரவிந்தன் கண்னையன் அவர்களின் முகநூல் பதிவிலிருந்து, அவரின் அனுமதியுடன்)
காலையில் அண்ணாதுரை பற்றி எழுதிய பதிவுக்கு வந்த சில கமெண்டுகள், "யாரிடம் தான் குறைகள் இல்லை?" என்பன போன்றவை. திமுக உறுப்பினர் வகையில் சில நண்பர்கள் எழுதிய பதிவுகளைப் பார்த்தப் பின் தான் நான் எழுதினேன்.
ஒரு நண்பர் பெரியார் சொன்னதாக ஒரு மேற்கோள் பகிர்ந்தார். பலாச்சுளையை தேனில் முக்கினால் கிடைக்கும் தித்திப்பை விட ஆதீத சர்க்கரை அந்த மேற்கோளில். அண்ணாதுரையின் ஆட்சி தான் பகுத்தறிவின் ஆட்சியாம், "மதம் வேண்டாம், சாதி வேண்டாம்" என்ற ஆட்சியாம். ஆற்காடு வீராசாமி சொல்கிறார் சாதிப் பார்த்து தான் அண்ணாதுரை சீட் கொடுத்தார் என்று. (காண்க https://twitter.com/drshyamkk/status/1134004617514143744).
நான் பொதுவாக காந்தி, நேரு, பாரதி ஆகியோர் நினைவு தினங்களுக்கு மட்டுமே பதிவு எழுதுவது வழக்கம். அவர்கள் எல்லோரிடமும் குறைகள் உண்டு. குறிப்பாக காந்தியிடம். ஆனால் அவர்களின் அருகில் எவ்வகையிலும் வைக்க தகுதியற்றவர் அண்ணாதுரை. ஜெயலலிதா, கருணாநிதியோடு ஒப்பிட்டால் அண்ணாதுரை மேன்மையானவர். பாஜகவோடு ஒப்பிட்டால் திமுக மேல். வாழ்க்கை என்பது இரு கோடுகள் தானே?
காமராஜரை பற்றி கேள்வி எழுப்பினார் ஒருவர். காமராஜரின் நிழலில் நிற்கும் தகுதியுண்டா அண்ணாதுரைக்கு? கல்வி புரட்ச்சி செய்த காமராஜர் எங்கே கல்வியை கண்டு கொள்ளாத கருணாநிதி போன்றோர் எங்கே. அண்ணாதுரை ஆட்சியில் இருந்ததே இரண்டு வருடத்துக்கும் குறைவு ஆகவே ஆட்சியை வைத்த்து அண்ணாதுரையை மதிப்பிட முடியாது. அண்ணாதுரையையும் காமராஜரையும் வேறு தளத்தில் தான் ஒப்பிட வேண்டும்.
'ஆரிய மாயை' எழுதியவர், 'வடவர்கள் நம்மவர்களும் அல்ல நல்லவர்களும் அல்ல' என்று வெறுப்பரசியல் செய்த பெரியாரின் சீடர். சமூக சீர் திருத்தம் வேறு வெறுப்பரசியல் வேறு. இன்று வரை திராவிட இயக்க விசிலடிச்சான் குஞ்சுகளுக்கு அந்த வித்தியாசம் தெரியாது.
'கம்ப ரசம்', 'ரோமாபுரி ராணிகள்', 'மாற்றான் தோட்டத்துக்கு மல்லிகைக்கு மணம் உண்டு', 'நான் முற்றும் துறந்த முனிவனுமல்ல அவள் படி தாண்டா பத்தினியுமல்ல' என்றெல்லாம் ஆபாச கடை பரப்பியவர். காமராஜர் அப்படியா? கல்லூரி இளைஞர்கள் திமுக பக்கம் படை எடுத்ததில் இந்த ஆபாசங்களுக்கு கணிசமானப் பங்குண்டு.
"அடைந்தால் திராவிட நாடு இல்லையேல் சுடுகாடு" என்றார் பின்னர் வசதியாக ஈ.வெ.கி.சம்பத்தை பலிகடா ஆக்கி திராவிட நாடு கோரிக்கையை கை விட்டார். பெரியாரின் நாத்திகம் தேர்தலுக்கு உதவாதென்று 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்று பிதற்றினார். இந்த மாதிரி பித்தலாட்டங்களை காமராஜர் செய்தாரா?
அமெரிக்க்காவை பார், அங்கே ஆயுத பூஜை கொண்டாடுகிறானா, அவன் ராக்கெட் அனுப்புகிறான் என்ற அமெரிக்கா பற்றி எதுவுமே தெரியாமல் ஒரு ஆட்டு மந்தைக் கூட்டத்தின் முன் பேசினார் பேரறிஞர்.இந்த மாதிரி பினாத்தல்களை காமராஜர் செய்தாரா?
எப்படி ஜெயித்தார் அண்ணாதுரை. 'ருபாய்க்கு மூன்று படி அரிசி. மூன்று படியும் படிப்படியாக போடுவோம்' என்று வாய் சவடால். அப்புறம் குண்டடிப்பட்ட எம்.ஜி.ஆர் போஸ்டர். 'பேச நா இரண்டுடையாய் போற்றி' என்று பிராமணர்களை தூஷித்தவர் ஆச்சார்யர் கரம் பற்றினார். உலகிலேயே தன் தலைவன் அவன் விரும்பிய பெண்ணை மணம் புரிந்தான் என்பதற்காக கட்சியை உடைத்த ஒரே ஆள் அண்ணாதுரை தான். இதையெல்லாம் காமராஜர் செய்தாரா? காங்கிரசுக்கும் சினிமாக்காரர்கள் பிரச்சாரம் செய்தார்கள் ஆனால் காங்கிரசில் அவர்களுக்கு என்ன இடம்? திமுகவில் சினிமாக்காரர்களின் இடம் என்ன?
கல்வியை தாங்களே வலம்புரி சங்கில் வைத்து தமிழனுக்கு பாலூட்டியது போல் திராவிட இயக்க விசிலடிச்சான்கள் கூவுவார்கள். உண்மை வேறு.
1967-இல் அண்ணாதுரை ஆட்சிக்கு வந்த போது தமிழகத்தில் 8 அரசு மருத்துவக் கல்லூரிகள், அவற்றில் இரண்டு சுதந்திரத்திற்கு முன் பிரிடிஷ்காரன் கட்டியது. 20 வருடத்தில் (1947-67) 6 அரசு மருத்துவக் கல்லூரிகள் காங்கிரஸ் ஆட்சியில். அதன் பின் கழக ஆட்சியில் (இதில் எம்.ஜி,ஆரை சேர்க்க மாட்டார்கள்) 1967-1977 வரை திறக்கப்பட்ட அரசு மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை: பூஜ்யம். அடுத்த அரசு கல்லூரி 1986-இல் தான். ஆக 20 வருடம் தமிழகத்தில் ஒரு அரசு மருத்துவக் கல்லூரி கூட திறக்கப்படவில்லை. இன்று இருக்கும் 34 அரசு கல்லூரிகளில் 6 தான் திமுக ஆட்சியில் திறக்கப்பட்டது.
(காண்க https://en.wikipedia.org/…/List_of_Tamil_Nadu_Government_Me…).
காமராஜர் ஆட்சியில் ஒரு வருட சாதனையை காண முதல் கமெண்டை பார்க்கவும். வருடாவருடம் அரசாங்க பணிகளை பட்டியலிடும் ஒரு வெளியீட்டில் இருந்து எடுத்தவை அவை. காமரஜருக்கு கொடுக்கும் மரியாதையை எக்காலத்திலும் மறந்தும் கூட அண்ணாதுரைக்கு கொடுக்க முடியாது.
இன்றைய அரசியல்வாதிகளோடு ஒப்பிட்டால் அண்ணாதுரை மோசமில்லை. ஆனால் அவர் சம காலத்தவரோடு ஒப்பிட்டால் தமிழக அரசியலை கீழ்மை நோக்கிய பயணத்துக்கு பாதை அமைத்தவர் அவர் தான்.
சமூக சீர் திருத்தம் என்பார்கள், இட ஒதுக்கீடு என்பார்கள். அதெல்லாம் அதுவும் இந்த மகான்கள் கண்டு பிடித்ததில்லை அவையெல்லாம் ஏற்கனவே பல அரசுகளும் செய்து கொண்டிருந்தவை தான். இட ஒதுக்கீட்டை வைத்து அரசியல் செய்ததில் சாதனை படைத்தது திராவிட இயக்கம் என்று சொல்லலாம். குறைகள் எல்லோரிடத்தும் உண்டு ஆனால் குறைகள் பிரதானமா, குணம் பிரதானமா என்று பார்த்தால் காமராஜருக்கும் அண்ணாதுரைக்கும் இருக்கும் வித்தியாசம் புரியும்.
இந்த சாதி மறுப்பு மாய்மாலமெல்லாம் பம்மாத்து. கீழ வெண்மணி கலவரத்தில் பாதிக்கப்பட்டோருக்கு திமுக என்ன செய்தது? திமுகவினர் டிப்ளமேடிக்காக பாராமுகமாக இருப்பது இன்று முளைத்த புது பழக்கமல்ல அண்ணாதுரை காலத்தில் இருந்து அப்படித்தான்.

No comments:
Post a Comment